விண்வெளிக்குப் பறக்கும் வீரரை திருமணம் செய்த தனுஷ் பட நடிகை!

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களில் ஒருவரான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை, பிரபல மலையாள நடிகை லீனா திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பிரசாந்த், லீனா
பிரசாந்த், லீனாஇன்ஸ்டா

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ’ககன்யான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்கீழ் 2025ஆம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அந்தவகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு நேற்று (பிப்.27) சென்ற பிரதமர் மோடி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை அறிமுகப்படுத்தினார். அதில், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் ஒருவர்.

இவரை, மலையாள நடிகை லீனா கடந்த ஜனவரி 17ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். ஆனால், தனது திருமணம் பற்றிய தகவலை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார். இந்த நிலையில், நேற்று மலையாள நடிகை லீனா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அத்திருமணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், "இன்று, 27 பிப்ரவரி 2024 அன்று, நமது பிரதமர் மோடி முதல் இந்திய விண்வெளி வீரர்களை இந்திய விமானப்படை போர் விமானி குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருக்கு வழங்கினார். இது நமது நாட்டிற்கும், நமது கேரள மாநிலத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுத் தருணம். அவருடைய பணியின் காரணமாக அதிகாரப்பூர்வமாகத் தேவைப்படும் ரகசியத் தன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. நான் 17 ஜனவரி, 2024 அன்று பிரசாந்துடன் ஒரு பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க இந்த அறிவிப்புக்காகக் காத்திருந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பெயரை பிரதமர் மோடி அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் நடிகை லீனா வெளியிட்டுள்ளார். லீனா- பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் ஜோடியாக இடம்பெற்றுள்ள புகைப்படங்களின் தொகுப்பையும் அதில் பகிர்ந்துள்ளார்.

நடிகை லீனா, 70-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தவிர, தமிழில், நடிகர் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை லீனா, அபிலாஷ் குமார் என்பவரை 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2014-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com