
மகாராஷ்டிராவில் இன்றுடன் பாஜகவின் ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.
288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் அரசியல் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரும், பாஜகவின் கூட்டணி கட்சியான இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர ஆளுநரை தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்து பேசினார். இந்நிலையில் தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். இன்றுடன் ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.