தேர்தலில் இனி போட்டியிடப் போவதில்லை என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. முதலமைச்சராக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இருக்கிறார். இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி தொடருகிறது. இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. இதற்கிடையே மண்டியா, ஹாசன் தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள்தான் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியினர் சொல்லி வருகிறார்கள். மண்டியாவில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் தேவகவுடாவின் பேரன். இதே போல ஹாசன் நாடாளுமன்ற தேவேகவுடாவின் மற்றொரு பேரனும், அமைச்சர் எச்.டி.ரேவண்ணா வின் மகனுமான பிரஜ்வல் போட்டியிடுகிறார்.
இதற்காக, ஹாசன் மாவட்டத்தில் உள்ள, குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்து தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.
அப்போது, தேவேகவுடா பேசும்போது, ‘’ நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் என் பேரன் பிரஜ்வல் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நான் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன். இனி தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவு செய்துள் ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் யோசித்து வருகிறேன். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நன்றாக நடந்து வருகிறது’’ என்றார். பிரஜ்வலுக்கு வாக்கு கேட்டபோதும், அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறியபோதும் தேவகவுடா கண்கலங்கினார்.
இதை நாடகம் என்று கூறியுள்ள பாஜக, ‘கண்ணீர் வடிப்பது தேவகவுடா குடும்பத்துக்கு புதிதில்லை. அழுதே மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். சரியாக, தேர்தல் நேரத்தில் மட்டுமே தேவகவுடா குடும்பத்தினர் கண்ணீர் விடுகின்றனர். தேர்தலுக்குப் பின் அவர் குடும்பத்தினருக்கு ஓட்டு போட்டவர்கள் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளது.