சபரிமலை மண்டல பூஜை | ஐயப்பனுக்கு 16 வகை கூட்டு, பொறியலுடன் "சத்யா" விருந்து படைத்த தேவஸ்வம் போர்டு!
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலையில், திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 451 பவுன் தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு இன்று மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக கடந்த நான்கு நாட்களாக விழாக்கோலம் பூண்டுள்ளது சபரிமலை. இதையடுத்து தேவஸ்வம் போர்டு பணியாளர்கள், போலீஸார் நடத்திய "கற்பூர ஆழி" ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள், தங்க அங்கி பவனி என களைகட்டிய சபரிமலையில், பக்தர்கள் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மண்டல பூஜையின் முன்னோடியாக சபரிமலை ஐயப்பனுக்கு விளக்கேற்றி, தலை வாழை இலையில் அவியல், துவரன் அடங்கிய 16 வகை கூட்டு, பொறியல், அடைபிரத பாயாசம், வடை, அப்பளம என அறுசுவை உணவு படைக்கப்பட்டது. சபரிமலை அன்னதான மண்டபத்தில் நடந்த நிகழ்வில், சபரிமலை தந்திரி கண்டாரு பிரம்ம தத்தன், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பிரசாந்த், தேவஸ்வம் போர்டு அமைச்சர் வாசவன் ஆகியோர் ஐயப்பனுக்கு விருந்து படைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு உணவு படைத்து பூஜிக்கப்பட்ட பின், சபரிமலை மண்டல காலத்தில் பணியாற்றிய போலீஸார், தேவஸ்வம் போர்டு உள்ளிட்ட பல்துறை பணியாளர்களுக்கு "சத்யா" விருந்து படைக்கப்பட்டது.