மீண்டும் மீண்டுமா.. இந்த முறை 40 நாட்கள்.. பரோலில் வந்தார் பாலியல் குற்றவாளி ‘சாமியார்’ ராம் ரஹீம்!
தேரா சச்சா சவுதா தலைவராக இருப்பவர், குர்மீத் ராம் ரஹீம் சிங். ஆகஸ்ட் 15ஆம் தேதி 58 வயதைத் தொடப்போகும் சிங், தனது இரண்டு சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 2017இல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். 2019இல், பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்தர்பதியைக் கொன்றதற்காகவும் அவரும் மேலும் மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 40 நாள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள சுனாரியா சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தனது குதிரைப்படையுடன் சிர்சா தலைமையகத்திற்குச் சென்றார். எனினும், 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங் சிறையில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவது இது 14வது முறையாகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு 21 நாள் விடுப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன்பு, இந்த ஆண்டு ஜனவரியில் அவருக்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் மட்டும் அவருக்கு மூன்று முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், அவர் இதுவரை 326 நாட்கள் சிறைக்கு வெளியே கழித்துள்ளார்.
கடந்த காலங்களில், பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் சில பரோல்கள் பஞ்சாப், ஹரியானா மற்றும் அண்டை மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் வந்துள்ளன. 2022ஆம் ஆண்டில், அவர் மூன்று முறை சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின்போது பிப்ரவரியில் 21 நாட்கள், பின்னர் ஜூன் மாதத்தில் ஹரியானாவில் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்றபோது ஒரு மாதம், பின்னர் அக்டோபரில் ஹரியானா இடைத்தேர்தலின் போது 40 நாட்கள். அதற்கு முன்பு, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற அக்டோபர் 2020இல் 40 நாள் பரோலில் வெளியே வந்தார்.