
ஆதார் அட்டை இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச்சென்றுள்ளனர். ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்க முடியும் என ஊழியர்கள் கூறினர். இதனால் தவித்த கர்ப்பிணி, மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
இதுபற்றி அந்தப் பெண்ணின் கணவர் கூறும்போது, மருத்துவமனை ஊழியர்கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை போன்றவற்றைக் கேட்டனர். இல்லை என்று சொன்னோம். அப்படியென்றால் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். வேறு மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியே வந்தோம். வாசலில் என் மனைவிக்கு குழந்தை பிறந்துவிட்டது’ என்றார்.
இந்நிலையில் இது தொடர்பாக குர்கான் தலைமை மருத்துவ அதிகாரி விசாரணை மேற்கொண்டார். சம்பவத்தன்று பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் பணியில் இருந்த மற்ற பணியாளர்களுக்கு இவ்விவகாரத்தில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.