கேரளாவில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. மக்கள் கடும் அச்சம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா அச்சத்திற்கு இடையே “டெங்கு காய்ச்சல்” பரவி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.
தமிழக - கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரால் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றே இல்லாத மாவட்டமாக இருந்த இடுக்கி மாவட்டத்தில் தற்போது 52 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். நோய் தொற்று பாதிப்படைந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள், தொடர்பு வைத்திருந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டாலும், மக்கள் கொரோனா அச்சத்தில் இருந்து மீளாமல் உள்ளனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக “டெங்கு காய்ச்சல்” பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தமிழக - கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் மட்டும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். வண்டிப்பெரியாறில் 3 பேர், தொடுபுழாவில் 4 பேர், கட்டப்பனையில் 2 பேர் என ஆங்காங்கே மாவட்டத்தில் “டெங்கு” பரவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து இடுக்கி மாவட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை டெங்கு தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளன. விவசாயத்திற்கு அடுத்து சுற்றுலா தொழில் மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையால் இதர மாநில எல்லைகள் அடைக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து தங்கும் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், ”ஹோம் ஸ்டே”க்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளன.
இவற்றில் உள்ள தண்ணீர் தொட்டிகள். குளியலறைகள், நீச்சல் குளம், கழிவுநீர் கால்வாய் ஆகியன பராமரிப்பின்றி கிடப்பது, தண்ணீர் தேங்கியிருப்பது “டெங்கு காய்ச்சல்” பரப்பும் கொசுக்கள் உற்பத்திக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதுவே டெங்கு காய்ச்சல் பரவ முதல் காரணம் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து பூட்டிக்கிடக்கும் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளை திறந்து சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, “டெங்கு காய்ச்சல்” உறுதி செய்யப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

