பணமதிப்பிழப்பு ஏழைகள், விவசாயிகள், சிறுவணிகர்கள் மீதான தாக்குதல்: ராகுல்காந்தி

பணமதிப்பிழப்பு ஏழைகள், விவசாயிகள், சிறுவணிகர்கள் மீதான தாக்குதல்: ராகுல்காந்தி
பணமதிப்பிழப்பு ஏழைகள், விவசாயிகள், சிறுவணிகர்கள் மீதான தாக்குதல்: ராகுல்காந்தி

நம்முடைய ஏழைகள் விவசாயிகள்,தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதல் தான் பணமதிப்பிழப்பு. இந்தியாவில் ஏழைகளுக்கு பணமதிப்பிழப்பினால் கிடைத்த பயன் என்ன? ஒன்றுமில்லை. இந்தியாவின் பெரிய கோடீஸ்வரர்கள் மட்டுமே அதன் பயனாளிகள் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் பணமதிப்பிழப்பை அறிவித்தார். அதனால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பயனற்று போயின, ஒட்டுமொத்த இந்தியாவும் வங்களின் வாசல்முன் நின்றன. இது கருப்பு பணத்தை ஒழித்ததா? இந்தியாவில் ஏழை மக்கள் பணமதிப்பிழப்பினால் பெற்ற பயன் என்ன? என்றால் விடை ஒன்றுமே இல்லை.

அப்படியானால் பணமதிப்பிழப்பினால் யார் பயனடைந்தது? இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மட்டுமே அதன் பயனாளிகள். உங்கள் சட்டை பைகளில், நீங்கள் சம்பாதித்த உங்கள் பணம் அரசாங்கத்தால் பெருமுதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பயன்படுத்தப்பட்டது.  இது அவரின் முதல் இலட்சியமே. இரண்டாவது இலட்சியம் நம் ஒட்டுமொத்த அமைப்பிலிருந்தே பணத்தை துடைத்தெடுப்பதுதான்.

ரொக்க பரிவர்த்தனையில் இயங்கும் அமைப்புசாரா பொருளாதாரத்தை உள்ளடக்கியதுதான் முறைசாரா துறை. சிறுகடை வியாபாரி, விவசாயிகள், தொழிலாளிகள் ரொக்க முறையில்தான் தொழில் செய்கின்றனர். முறைசாரா, அமைப்புசாரா வகை மூலமாக புழங்கிவரும் ரொக்க பணத்தையும் பணமதிப்பிழப்பின் மூலமாக ஒழிப்பதுதான் இரண்டாவது இலட்சியம். ரொக்க பரிவர்த்தனை இல்லா இந்தியாதான் தேவை என பிரதமரே கூறினார். ஆனால் ரொக்க பரிவர்த்தனை இல்லா இந்தியா மூலம் முறைசாரா துறையே அழிந்துவிடும். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவணிகர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டனர். பணமதிப்பிழப்பு இவர்கள் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல். பணமதிப்பிழப்பு அமைப்புசாரா பொருளாதாரத்தின்மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல். இந்த தாக்குதலை நாம் அடையாளம் காண வேண்டும். ஒட்டுமொத்த தேசமே இதனை எதிர்த்து போராடவேண்டும்” என்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com