'டெல்டா ப்ளஸ்’ கொரோனா கவலையளிக்க கூடியதாக வகைப்படுத்தப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர்

'டெல்டா ப்ளஸ்’ கொரோனா கவலையளிக்க கூடியதாக வகைப்படுத்தப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர்
'டெல்டா ப்ளஸ்’ கொரோனா கவலையளிக்க கூடியதாக வகைப்படுத்தப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர்

இந்தியாவுக்கு வெளியே புதிதாக கண்டறியப்பட்டுள்ள டெல்டா ப்ளஸ் என்ற மாறுபட்ட கொரோனா, கவலையளிக்க கூடியதாக இன்னும் வகைப்படுத்தவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தேசிய ஊடக மையத்தில், இந்த வார தொடக்கத்தில் அளித்த பேட்டியில், “டெல்டா ப்ளஸ் என்ற புதிய மாறுபட்ட கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலவரம், புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் என்றே இருக்கிறது. இது, கவலையளிக்க கூடியதாக, அதாவது Variant of Concern என்ற வகைக்குள் கொண்டுவரவில்லை. இப்போதைக்கு, டெல்டா ப்ளஸ் கொரோனாவின் தன்மை பற்றியும் எங்களுக்கு தெரியாது.

இது, நம் நாட்டில் இருக்கிறதா என்பதை கண்காணித்து, அதற்கேற்ப சுகாதார நடவடிக்கைகளை எடுப்பதுதான் நாம் முதல் செய்ய வேண்டியது. இந்த டெல்டா ப்ளஸ் பரவலின் விளைவை, அறிவியல்பூர்வமாக மட்டுமே நாம் கண்காணிக்க வேண்டும்.

இது, நம் நாட்டுக்கு வெளியேதான் கண்டறியப்பட்டுள்ளது என்பதால், இதன் மரபியல் குறித்து ஆராயும் இந்திய கோவிட் கூட்டமைப்பு தனது ஆய்வை தொடங்கவேண்டும். இந்த அமைப்பின்கீழுள்ள 28 ஆய்வு மையங்களின் எதிர்கால பணி, இந்த ஆய்வுதான்.

இந்த உருமாறிய கொரோனா, நமக்கு மீண்டுமொருமுறை கட்டுப்பாடு நடவடிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவுப்படுத்துகிறது. இதை, எந்த ஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது என்பதை நாம் நினைவில் நிறுத்தவேண்டும். ஆகவே விரைந்து இதன் தன்மையை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த தடுப்பு நடவடிக்கையில், இப்போது மேற்கொள்ளப்படும் விதிமுறைகளும் அடங்கும்.

கோவிட் தடுப்புக்கான அடிப்படை நடவடிக்கைகளை பின்பற்றுவதன்மூலம், எந்தவகை உருமாறிய – மாறுபட்ட கொரோனாவையும் நம்மால் சமாளிக்க முடியும். கொரோனாவை பொறுத்தவரை, தொற்று பரவலுக்கு அடிப்படை காரணம், பரவல் சங்கிலிதான். அதை முறியடித்துவிட்டால், எந்தவகை உருமாறிய – மாறுபட்ட கொரோனா பரவலையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும்” என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com