டெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ
டெல்லி கல்காஜி பகுதியில் உள்ள உணவகத்தின் முன்பு டெலிவரி பாய்ஸ் சிலர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். ‘ஏன் வாகனங்களை இப்படி நிறுத்துகிறீர்கள்’ என்று உணவகத்தின் உரிமையாளர் டெலிவரி இளைஞர்களிடம் கூறியுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் அங்கிருந்து அந்த இளைஞர்கள் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் ரோகித் கூறுகையில், “மாலை நேரத்தில் அதிக கூட்டம் வரும். அந்த நேரத்தில் வாகனங்களை சரியாக நிறுத்தவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு இடையூராக இருக்கும். அந்த இளைஞர்களுக்கு எப்படி வாகனங்களை நிறுத்துவது என்றே தெரியவில்லை. சர்ச்சை தொடங்கியதும் போலீஸ் ஒருவர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து சென்றுவிடுமாறு கூறினார்” என்றார்.
இதனையடுத்து, டெலிவரி பாய்ஸ் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் மற்றவர்களை தொடர்பு கொண்டு உணவகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். உணவகத்திற்கு எதிராக முதலில் 25-30 பேர் கோஷங்களை எழுப்பினர். பின்னர் சுமார் 11 மணியளவில் அந்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களை அழைத்து வந்து உணவகத்தை கற்களாலும் கட்டைகளாலும் தாக்கினர்.
அப்போது, சுமார் 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அதில், பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். உள்ளே தாக்குதல் தொடங்கியதும், பெண்கள் மற்றும் சிறுவர்களை ஹோட்டலின் கிச்சன் வழியாக பாத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனால் உணவகத்தின் கண்ணாடிகள் உடைந்ததுடன் அங்கிருந்த சில பொருட்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் காட்சிகள் உணவகத்தின் வெளியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதில், இளைஞர்கள் சேர்களை அடித்து நொறுக்குவதும், கண்ணாடிகளை அடித்து உடைப்பதும் தெளிவாக தெரிகிறது.