காஷ்மீரில் 47; ஜம்முவுக்கு 43 : தொகுதி நிர்ணய ஆணைக்குழு அறிக்கை

காஷ்மீரில் 47; ஜம்முவுக்கு 43 : தொகுதி நிர்ணய ஆணைக்குழு அறிக்கை
காஷ்மீரில் 47; ஜம்முவுக்கு 43 : தொகுதி நிர்ணய ஆணைக்குழு அறிக்கை

ஜம்மு-காஷ்மீர் சட்டபேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை, மறுவரையறை செய்ய அமைக்கப்பட்ட தொகுதி நிர்ணய ஆணைக்குழு, காஷ்மீர் பகுதியில் தற்போதுள்ள 46 தொகுதிகளை 47 ஆக அதிகரிக்க பரிந்துரை அளித்துள்ளது. சர்ச்சைக்குள்ளான ஆலோசனைகளுக்குப் பிறகு, ஜம்மு பகுதியில் உள்ள 37 சட்டப்பேரவை தொகுதிகளை 43 ஆக அதிகரிக்கவும், தனது அறிக்கையில் பரிந்துரை அளித்துள்ளது.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் செயல்பட்டு வரும் ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையம் தனது இறுதி அறிக்கையை வியாழக்கிழமை சமர்ப்பித்தது. ஒட்டுமொத்தமாக ஜம்மு-காஷ்மீரில் இப்போதுள்ள 83 சட்டப்பேரவை தொகுதிகளை 90 ஆக அதிகரிக்க ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இந்த ஆணையத்தின் அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையம் தனது நீடிக்கப்பட்ட பதவிக்காலத்தின் இறுதி நாளில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்தத் தொகுதி மறுநிர்ணய ஆணையம் மார்ச் 6, 2020 அன்று நிறுவப்பட்டது. தொகுதி நிர்ணயம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ஒரு வருடத்தில் அளிக்க ஆணையத்துக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 2021 மற்றும் மார்ச் 2022-ல் இந்த ஆணையத்துக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது.

ஜம்முவில் தொகுதிகளின் எண்ணிக்கை காஷ்மீர் பகுதியை காட்டிலும் அதிகமாக கூறப்படுவது, அரசியல் உள்நோக்கும் கொண்டது என மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஜம்முவில் வலுவாக உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு இத்த முடிவு சாதகமாக இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். காஷ்மீர் பகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு வலுவாக உள்ளதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. ஆலோசனைகள் நடந்தப்போதே எதிர்க்கட்சிகள் ஜம்முவில் தொகுதிகளை அதிகரிப்பதை ஏற்க முடியாது என வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அரசு 2019-ம் வருடம் அக்டோபர் மாதத்தில் சட்டப்பிரிவு 370-தை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிரித்து. லடாக் பகுதி ஒரு யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு-காஷ்மீர் இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டு, சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் என மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில்தான், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பரிந்துரை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். அதற்குள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணைய பரிந்துரை ஏற்கப்படுமா, ஏற்கப்பட்டால் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது, தற்போது ஜம்மு-காஷ்மீர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர், விரைவில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் ஆணையர் கே. கே. சர்மா மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஹிருதேஷ் குமார் ஆகியோர், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் சிறப்பு உறுப்பினர்களாக செயல்பட்டனர்.

நாடாளுமன்ற தொகுதிகளை பொறுத்தவரை ஆணையம் மாற்றங்கள் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்த அதிகாரிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகள், இந்தியாவின் அங்கமாக இருந்தாலும் அங்கு தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என குறிப்பிட்டனர். நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டபிறகே, புதிய தொகுதி வரையறை அமல்படுத்த முடியும். ஆகவே, பரிந்துரைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தவேண்டுமென்றால், அரசு ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அரசாணை வெளியிட வேண்டும்.

நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் பரிந்துரையில், ஜம்முவில் 3 மற்றும் காஷ்மீர் பகுதியில் 9 தொகுதிகள் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்தகைய இடஒதுக்கீடு இல்லாத நிலையில், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் 9 தொகுதிகளை பழங்குடியினருக்கு ஒதுக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 நாடாளுமன்ற தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் 18 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறும் என வியாழக்கிழமை நடைபெற்ற ஆணையத்தின் இறுதி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தோர் பிரதிநிதிகளை இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமன உறுப்பினர்களை அரசு நியமிக்கலாம் என நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையம் தனது பரிந்துரைகள் அடங்கிய அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியை சேர்ந்தர்களுக்கும் நியமன உறுப்பினர் முறையில் பிரதிநிதித்துவம் அளிப்பதை அரசு பரிசீலனை செய்யலாம் எனவும் ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com