பெற்ற குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்..!
பெற்ற தாயே 2 வயது மகனை முதல் மாடியில் இருந்து தரை தளத்திற்கு வீசிய அதிர்ச்சி சம்பவம் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
டெல்லி பிரகலாத்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிதின் - சோனு தம்பதியினர் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு மாமனார், மாமியாருடன் சோனு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பொறுமையிழந்த சோனு, வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி கீழே வீசியுள்ளார். ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அவர், திடீரென கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தமது 2 வயது மகனையும் தூக்கி வீசியுள்ளார். முதல் மாடியிலிருந்து தரைதளத்தில் விழுந்த குழந்தைக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெற்ற தாயே குழந்தையை தூக்கி வீசும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் நிதின் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பெற்ற குழந்தையை ஆத்திரத்தில் தூக்கியெறிந்த சோனுவுக்கு மனநல ஆலோசனை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.