அதிரவைத்த ஃபேஸ்புக் பதிவு - கணவரை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
தனது கணவரை கொலை செய்தபின், ஃபேஸ்புக்கில் பதிவு போட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ரேணுகா.
தெற்கு டெல்லியின் சதர்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள், சிராக் ஷர்மா மற்றும் ரேணுகா. இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் இருவருக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இருவருக்கும் விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தார்கள். அப்போது இருவருக்குள்ளும் குழந்தை இல்லாத விஷயமாக சண்டை வந்துள்ளது. அப்போது கணவர் சிராக், மனைவி ரேணுகாவை கண்டபடி திட்டி விட்டு தூங்க சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் ஆவேசமடைந்த ரேணுகா சமையலறையில் இருந்த ஒரு கத்தியை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த கணவரை சராமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த சிராக் ஷர்மா படுக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விட்டார். அதன் பிறகு ரேணுகா, தனது ஃபேஸ்புக் ஐடியில், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போஸ்ட் போட்டுள்ளார். அப்பதிவை பார்த்து அதிர்ந்துபோன ஃபேஸ்புக் நண்பர்கள் பலர் ரேணுகாவை காப்பாற்ற அவரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.
மேலும் அவரின் வீட்டு உரிமையாளருக்கும் போனில் தகவல் தெரிவித்து ரேணுகாவை காப்பாற்ற சொல்லியிருக்கிறார்கள். அவர் வந்து உள்ளுக்குள் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்தார். அப்போது ரேணுகா தன்னை கத்தியால் குத்திக்கொண்டு உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடந்தார். படுகாயமடைந்து கிடந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிராக் ஷர்மா இறந்தார். ரேணுகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.