100 வழக்குகளுடன் அம்மா, 6 மகன்கள்: திகார் சிறையில் வசிக்கும் குடும்பம்!
நூறு கிரிமினல் வழக்குகளுடன் அம்மா, 6 மகன்களுடன் ஒரு குடும்பமே திகார் சிறையில் வசித்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் தோல்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்கான் சிங். இவர் மனைவி பாஸிரன். இவர்களுக்கு 4 மகள்கள், 6 மகன்கள் உள்ளனர். சிங், எலெக்ட்ரிஷியன் வேலை பார்த்துவந்தார். வருமானம் போதவில்லை என்பதால் குடும்பத்தைக் காப்பாற்ற கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டார் பாஸிரன். நல்ல வருமானம் வந்தது. பின்னர் அங்கிருந்து டெல்லி, சங்கம் விகார் பகுதிக்கு குடும்பம் குடிபெயர்ந்தது. அங்கும் கள்ளச்சாராய வியாபாரத்தைத் தொடர்ந்தார் பாஸிரன். அவரது மகன்கள் படிப்பை விட்டுவிட்டு அம்மாவுக்கு உதவியாகக் களத்தில் இறங்கினர். பின்னர், சாராயம் வாங்க வரும் ரவுடிகளுடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டது. கத்தியை காட்டி பணம்பறிப்பது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தது, கொலை, கொள்ளை உட்பட ஆறு மகன்கள் மற்றும் பாஸிரன் மீது 100 வழக்குகள். இதையடுத்து குடும்பமே இப்போது திகார் சிறையில் இருக்கிறது.
பாஸிரன் வசிக்கும் பகுதியில் விசாரித்தால், ‘சிங் நல்லவர். ஆனால் அவர் மனைவிதான் அப்படி. நாங்கள் அவரிடம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. அவர்களின் மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது’ என்றார்கள்.
சிறையில் இருந்து கொண்டும் தங்கள் நெட்வொர்க் மூலம் சமூக விரோத செயல்களில் இந்தக் குடும்பம் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.