கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
டெல்லியில் தற்போது பரவும் கொரோனா ‘நான்காம் அலை’ மிகவும் ஆபத்தானது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, “நகரில் கடந்த 10-15 நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையின் தகவல்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 10,732 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார்
மேலும் "நீங்கள் தடுப்பூசி எடுத்திருந்தாலும்கூட கட்டாயமாக முக்ககவசம் அணியுங்கள். டெல்லியில் தற்போது பரவும் கொரோனா நான்காவது அலை மிகவும் ஆபத்தானது. இதனால் தற்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, தயவுசெய்து அவற்றைப் பின்பற்றுங்கள்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பொதுமுடக்கம் பற்றி பேசிய கெஜ்ரிவால், “கொரோனா பரவுவதை குறைக்க பொதுமுடக்கம் தீர்வு இல்லை. இருந்தாலும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் பொதுமுடக்கம் விதிக்கப்படலாம். டெல்லி கொரோனா செயலி இப்போதும் இயங்குகிறது, எந்த மருத்துவமனையில் படுக்கைகள் உள்ளன என்பதை நீங்கள் அந்த ஆப்-பில் பார்க்கலாம். தேவைப்படும் பட்சத்தில் படுக்கைகள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை நேரடியாக அழைத்துச் செல்லுங்கள்.
மக்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள். அரசு மருத்துவமனைகளில் நல்ல ஏற்பாடுகள் உள்ளன, எனவே அங்கு செல்லுங்கள்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.