\
Delhi Qadeemi Masjid Row Government Seeks Demolition Who Owns the Land
Qadeemi MasjidPTI

டெல்லி மசூதி | அகற்றத் துடிக்கும் மத்திய அரசு.. உரிமை யாருக்கு? வெடிக்கும் சர்ச்சை.. பின்னணி என்ன?

புது டெல்லியில் உள்ள கிருஷி பவன் (Krishi Bhawan) வளாகத்தினுள் அமைந்துள்ள நூற்றாண்டு பழைமையான கதீமி மசூதியை (Qadeemi Masjid)அகற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

புதுடெல்லியின் மையப்பகுதியில், அதாவது டாக்டர் ராஜேந்திர பிரசாத் சாலையில் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் கிருஷி பவன் வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தினுள் கதீமி மசூதி அமைந்துள்ளது. கிருஷி பவன் என்பது நூற்றாண்டு பழமையான கால கட்டடம் ஆகும். அதாவது, நேரு காலத்து அரசாங்கக் கட்டடம் ஆகும். இந்த நிலம் தொடக்கம் முதலே அரசிடமே இருந்துள்ளது. 1940-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, அப்போதைய பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கும் ஜமா மசூதி நிர்வாகக் குழுவுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அரசுக்குச் சொந்தமான அந்த நிலத்தில் உள்ள கட்டமைப்பைத் தொழுகைக்காகப் பயன்படுத்திக்கொள்ள மட்டும் நிர்வாகக் குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. நிலத்தின் உரிமை மசூதிக்கு வழங்கப்படவில்லை. பின்னர் 1970-ஆம் ஆண்டு டெல்லி வக்ஃப் வாரியம் இதனை வக்ஃப் சொத்தாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Qadeemi Masjid
Qadeemi MasjidPTi

இதற்கிடையே, கிருஷி பவன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் இஸ்லாமியர்கள் பல ஆண்டுகளாகவே தங்கள் பணிநேரத்தின்போது இங்கு தொழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கதீமி மசூதியை, சென்ட்ரல் விஸ்டா (Central Vista) மறுசீரமைப்புப் பணிகளுக்காக அகற்ற வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசு அலுவலக வளாகத்திற்குள் ஒரு மதச்சார்பான கட்டமைப்பு இருப்பது மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானது என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது இந்த நிலம் முழுவதும் அரசுக்குச் சொந்தமானது என்பதாலும், 1940 ஒப்பந்தம் மசூதியைப் பயன்படுத்த மட்டுமே அனுமதித்தது என்பதாலும் இதனை அகற்ற அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு, மசூதி நிர்வாகக் குழுவும் எதிர்த்து வழக்காடி வருகிறது.

delhi high court
delhi high courtPTI

கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மசூதிக்குப் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ’தற்போதைய அரசு வளாகம் நிறுவப்படுவதற்கு முன்பே இது இருந்துள்ளது. 1945ஆம் ஆண்டு வரையிலான பல்வேறு வரலாற்றுப் பதிவேடுகள் இதை ஆவணப்படுத்தியுள்ளன’ என கதீமி மசூதியின் பராமரிப்புக் குழு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மசூதிக்குக் கீழே உள்ள நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்பதைப் பராமரிப்புக் குழு ஒப்புக்கொண்டுள்ளது. பரபரப்பான வழக்குக்கு மத்தியில், மறுசீரமைப்புத் திட்டங்கள் அந்த மசூதியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது.