’அஞ்ச மாட்டேன்; உயிரையும் இழக்க தயார்’ - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை!

’அஞ்ச மாட்டேன்; உயிரையும் இழக்க தயார்’ - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை!
’அஞ்ச மாட்டேன்; உயிரையும் இழக்க தயார்’ - காளி போஸ்டர் சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை!

தமிழ் கவிஞர், இயக்குநர், எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர் என பன்முகத் தன்மை கொண்டவரான லீனா மணிமேகலை புதிதாக இயக்கியுள்ள ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டர், சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளநிலையில், இதுகுறித்து அவர் ட்விட்டர் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

தேவதைகள், பறை, பலிபீடம் உள்ளிட்ட ஆவணப்படங்களையும், ‘செங்கடல்’, மாடத்தி ஆகிய திரைப்படங்களை இயக்கிவருமான லீனா மணிமேகலை தற்போது காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை கடந்த 2-ம் தேதி தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டநிலையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்.ஜி.பி.டி. சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுதந்திரம் என்ற பெயரில் இந்த மாதிரியான செயல்கள் சகித்துக்கொள்ள முடியாது என்றும், உச்சநீதிமன்றம் எதையும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக நெட்டிசன்கள் எதிர்மறை விமர்சனங்களை பதிய ஆரம்பித்தது மட்டுமின்றி, "ArrestLeenaManimekalai" என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும் பாஜகவின் அரியானா மாநில பொறுப்பாளர் அருண் யாதவ், இது குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அனைவரும் இந்து மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது வீடியோவை 'ரீட்வீட்' செய்து பலரும் ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு வருகின்றனர். விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களுள் ஒருவரான பிராச்சி சாத்வி, தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துக்களே விழித்திருங்கள், இந்து மதத்திற்கு எதிரான இயக்குநரை புறக்கணியுங்கள்" என பதிவிட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து பலரும் லீனா மணிமேகலைக்கு எதிராக கருத்து பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் லீனா மணிமேகலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க என லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இயக்குநர் லீனா மணிமேகலை மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கூறி, டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com