கொரோனா அச்சுறுத்தல்: டெல்லியில் 5 பேருக்கு மேல் ஒன்றாக கூட காவல்துறை தடை
டெல்லியில் 5 பேருக்கு மேல் ஒன்றாகக் கூட டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் பொது இடங்களில் கூட வேண்டாமென்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனால் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் என மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது கொரோனா எளிதாக தொற்றிவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. முடிந்தவரை வெளிப்பயணங்களை தவிர்த்து மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் நல்லது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் 5 பேருக்கு மேல் ஒன்றாகக் கூட டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது. அதேபோல் தேவை இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் டெல்லி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

