மனைவி நடத்தையில் சந்தேகம் : 6 லட்சத்திற்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்த கணவர்
தன் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கொலை செய்ய கூலிப்படைக்கு 6 லட்சம் ரூபாய்க்கு கணவர் துப்பாக்கி வாங்கி கொடுத்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லியில் நஜஃப்கர் பகுதியில் சோனு பண்டிட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக சோனுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத் தொழிலதிபரை கொலை செய்ய சோனு திட்டமிட்டுள்ளார். ஆகவே இந்தக் கொலையை செய்ய குல்வீர் தாகர் என்பவரை அனுகியுள்ளார்.
இந்தக் கொலைக்கு சன்மானமாக 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ந்த துப்பாக்கியை சோனு வாங்கி கொடுத்துள்ளார். அந்தத் துப்பாக்கியை பயன்படுத்து தொழிலதிபரை கொலை செய்ய குல்வீருக்கு அறிவுறுத்தியுள்ளார் சோனு. இதனைத் தொடர்ந்து இவர்களின் திட்டத்தின்படி தொழிலதிபர் தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி குல்வீர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனினும் இத்துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக தொழிலதிபர் உயிர்த் தப்பினார்.
இதன்பின்னர் குல்வீர் சிங் தலைமறைவாக இருந்துவந்தார். தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களின் தீவிர விசாரணையில் இந்தக் கொலை முயற்சிக்கும் குல்வீர் தாகருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குல்வீரை கைது செய்து விசாரித்தப் போது இது அனைத்தும் சோனுவின் திட்டம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள சோனுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தனது மனைவி ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தாக எண்ணி, அந்த நபரை கொல்ல விலை உயர்ந்த துப்பாக்கியை கணவரே வாங்கி கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.