அமைதியை தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணவர் - மனைவியின் புகாரால் மீட்டு கொண்டுவந்த போலீசார்
அமைதியை தேடி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய கணவரை கண்டுபிடித்து தருமாறு மனைவி அளித்த புகாரையைடுத்து போலீசார் அவரை மீட்டனர்.
டெல்லி பிதம்புரா பகுதியில் வசித்து வருபவர் கவுதம் குப்தா. இவர் திடீரென காணமல் போனதாக அவரது மனைவி கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி மயூரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டின் பகுதியில் இருந்து அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து கவுதம் குப்தாவை பின்தொடர்ந்தனர்.
விசாரணையில், கவுதம் குப்தா கோகட் என்கிளேவ் மெட்ரோ ரயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கண்டறிந்தனர். அதையடுத்து குப்தா காலை 9:10 மணியளவில் காஜியாபாத் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறுவதைக் காண முடிந்தது. பின்னர், காஷ்மீர் கேட் நிலையத்தில் இறங்கி காலை 9:47 மணிக்கு ஐ.எஸ்.பி.டி சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ உத்தரகாண்ட் பேருந்து நிலையம் அருகே குப்தா இருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதனால் கவுதம் குப்தாவின் குடும்பத்தினருடன் போலீசார் ஹரித்வாருக்கு சென்றனர், அங்கு அவர்கள் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து, கவுதம் குப்தா பஸ் ஸ்டாண்டில் இருப்பதைக் கண்டனர். இதையடுத்து அவரை மீட்டு டெல்லிக்கு கொண்டு வந்தோம்” எனத் தெரிவித்தனர்.
கவுதம் குப்தா செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு யாரிடமும் செல்லாமல் சென்றதும் அமைதியை தேடி சென்றதாக குப்தா கூறியதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.