டெல்லி மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு தேவை; தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை
டெல்லி தனியார் மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு தேவை என்று உயர் நீதிமன்றத்தில் தனியார் மருத்துவமனைகள் கோரிக்கை வைத்துள்ளன. நோயாளிகளை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யவுள்ளதால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கோரிக்கை வைத்துள்ளன.
முன்னதாக, இது குறித்து டெல்லி அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறியதாவது, “டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் குறைந்து வருவதன் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளை அவர்கள் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு தொகுப்பில் இருந்து டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் அளவு என்பது 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது. ஆனால் அங்கிருந்து தற்போதுவரை 270, 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் டெல்லியின் நிலைமை முடுமையாக சீரழிந்துவிடும்.
டெல்லியின் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத சூழல் காரணமாக நாங்கள் வெளிப்பகுதியில் இருந்துதான் ஆக்ஸிஜன் வாங்கி வருகிறோம். ஆனால் அந்த தனியார் நிறுவனங்களும் சில நேரங்களில் ஆக்சிஜன் கொடுப்பதில்லை. ஆகையால் டெல்லி மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். குறைந்தது 10 ஐஏஎஸ் அதிகாரிகளையாவது ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னையை கையாள அரசு நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய நிலவரப்படி டெல்லியில் 24,331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 348 நபர்கள் உயிரிழந்தனர்.