அலோபதிக்கு எதிரான பாபா ராம்தேவ் கருத்துக்கு தடை விதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

அலோபதிக்கு எதிரான பாபா ராம்தேவ் கருத்துக்கு தடை விதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
அலோபதிக்கு எதிரான பாபா ராம்தேவ் கருத்துக்கு தடை விதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

'அலோபதி மருத்துவத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட பாபா ராம்தேவுக்கு தடை விதிக்க முடியாது' என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

"கொரோனாவிலிருந்து குணமாக, எங்களது 'கொரோநில்' மருந்து உதவும்" என்றும், "அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது, அது தோல்வியடைந்த ஒன்று" என்றும் பாபா ராம்தேவ் சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு இந்திய மருத்துவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி மருத்துவ கவுன்சில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, "அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறியது, கருத்து சுதந்திரத்தின் கீழ் வரக்கூடிய ஒன்று. தற்பொழுது எனக்கு ஹோமியோபதி மருத்துவ முறையின் மீது நம்பிக்கை இல்லாமல் 'அது பலனளிக்காத ஒன்று' என நான் கூறினால், ஹோமியோபதி மருத்துவர்கள் என் மீது அவதூறு வழக்கு தொடர்வார்கள். அப்படி இருக்கும் பொழுது, அலோபதி மருத்துவ முறை குறித்து தனது சொந்த கருத்தை பாபா ராம்தேவ் கூறியதற்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், "இந்த வழக்கு பதிவு செய்த நேரத்தில், மோசமான வைரஸாக உள்ள கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுப்பிடிக்க வேண்டியதுதானே?" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் பாபா ராம்தேவ் தனது 'கொரோநில்' மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என விளம்பரப்படுத்தி வரும் நிலையில், அது தொடர்பான விளக்கத்தினை அளிக்குமாறு சம்மன் அனுப்பினர். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதையும் தெரிவிக்க வேண்டாம் எனவும் நீதிபதி வாய்மொழியாக கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் அலோபதி மருத்துவர்கள் கருப்பு நிறத்தை அனுசரித்து வருகின்றனர். அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

பாபா ராம்தேவ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவக் கவுன்சில் அவருக்கு சம்மன் அனுப்பியதோடு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com