நாடாளுமன்ற புதிய கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் பொருளாதார சிக்கல் அதிகமிருக்கும் இந்த சூழலில் அதிக கட்டுமான செலவில் புதிய நாடாளுமன்றம் அவசியமானதா என பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும் கேள்வி எழுப்பி வந்தனர்.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கிற பொருளாதார சிக்கல்களைக கருத்தில்கொண்டு ‘சென்ட்ரல் விஸ்டா’ என்று அழைக்கக்கூடிய புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்குத் தற்காலிக தடை விதிக்கவேண்டுமென சில வழக்கறிஞர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கை வழக்கறிஞர்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதிகள், புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய ’சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க முடியாது. இந்தக் கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது; அத்தியாவசியமானது என்று கூறியதுடன், கட்டுமானப் பணிக்கு தடைவிதிக்கக்கோரி வழக்குத்தொடர்ந்த மனுதாரரின் வழக்கில் உள்நோக்கம் உள்ளதாக கருதுவதால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். கட்டுமான பணிகளை இன்றுமுதல் தொடங்க டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.