"நான் என்ன குற்றம் செய்தேன்? "மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்ட உமர் காலித் கதறல் - யார் இவர்?

"நான் என்ன குற்றம் செய்தேன்? "மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்ட உமர் காலித் கதறல் - யார் இவர்?
"நான் என்ன குற்றம் செய்தேன்? "மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்ட உமர் காலித் கதறல் - யார் இவர்?

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித்துக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 

2020 கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் காலித்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ரஜ்னிஷ் பட்நாகர்ட் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், காலித்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

டிசம்பர் 2019 மற்றும் பிப்ரவரி 2020ல் டெல்லியின் ஜாமியா பகுதியிலும் வடகிழக்கு டெல்லியிலும் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) முன்னாள் மாணவர் தலைவர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் பலர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உமர் காலித் செப்டம்பர் 13,2020 அன்று கைது செய்யப்பட்டார். மேலும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொண்டதாகக் கூறி UAPA(Unlawful Activities Prevention Act) சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் உமர் காலித், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், ‘மனுவை ஆய்வு செய்தோம். இந்த மனுவுக்கு ஜாமீனை அனுமதிக்க, எந்த ஒரு தகுதியும் இல்லை’ என்று மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். 

யார் இந்த உமர் காலித் ?

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி வடகிழக்குப் பகுதியில் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையேயும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக வெடித்தது. இதில் டெல்லியே போர்களமான புகைப்படங்கள் வெளிவந்தன. 3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டது. இதன்பின்பு கலவரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

அப்போது கலவரங்கள் ஏற்பட மூளையாக செயல்பட்டதாக உமர் காலித் கைதுசெய்யப்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மேடைகளில் பேசும்போது கலவரத்துக்கு தயாராகும்படி மக்களை தூண்டியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

காலித் சொல்வது என்ன? 

”நான் எப்போதும் கலவரங்களை தூண்டுவது போலவோ அல்லது கலவரங்களுக்கு தயாராகுங்கள் என்றோ பேசியதில்லை. எப்போதும் அகிம்சை போராட்டத்தை பற்றி மட்டும் தான் பேசி வந்துள்ளேன். கலவரத்தில் ஈடுப்பட்ட யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஒரு விசாரணை கூட நடத்தவில்லை. அவர்கள் யார் என்று காவல்துறைக்கு நன்றாக தெரியும். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கவில்லை. அரசை எதிர்த்து பேசினோம் என்பதற்காக நாங்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறோம். நான் என்ன குற்றம் செய்தேன்? “ என்று காலித் பேசியுள்ளார்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உமரின் ஜாமீன் மனு மட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com