டெல்லியில் தொடரும் கனமழை: யமுனை ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்! மத்திய அரசின் உதவியை நாடிய முதல்வர்!
டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பெய்த மழைப்பொழிவு 153 மில்லி மீட்டராகப் பதிவு செய்யப்பட்டது. இது, 41 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த மிக அதிக கனமழையாகப் பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு, 1958 ஜூலை 20-21 ஆகிய தேதிகளில் 266.2 மில்லி மீட்டரும், அதைத் தொடர்ந்து 1982 ஜூலை 25-26 ஆகிய தேதிகளில் 169.9 மில்லி மீட்டர் மழையும் பெய்ததாகப் பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தொடர்ந்து அங்கு கனமழை பெய்து வருகிறது.
இதனால் டெல்லியின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கிய சூழலில், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மேக வெடிப்பு காரணமாக பெய்த அதீத கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் சூழலில் யமுனை ஆற்றில் அபாயகட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை நதியின் அபாயக் அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், மத்திய அரசின் உதவியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ளார். இதுகுறித்து அவர், “யமுனை ஆற்றில் 207.72 மீட்டராக நீர்மட்டம் உயர்ந்துள்ள சூழலில் இவை டெல்லிக்கு நல்ல செய்தி அல்ல. ஆகவே, தடுப்பணையில் இருந்து திறந்து விடப்படும் நீர்மட்டத்தை மேலும் உயர்த்தாத வகையில் போதிய நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்” என மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.