‘INDIA’ கூட்டணியின் பெயரை எதிர்த்த வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்!
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்களின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டியது. இந்நிலையில், கிரிஷ் உபாத்தியாயா என்பவர் இது தொடர்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “அரசியல் கட்சிகள் தங்களது தேவைகளுக்காக இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
'INDIA' என்ற சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடைசெய்யவேண்டும் என்று கோரிய அந்த வழக்கில் மத்திய அரசும், தலைமை தேர்தல் ஆணையமும் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
‘இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று’ என கூறிய நீதிபதிகள், வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.