மது அருந்திய போது தகராறு -லிப்ட் கொடுத்த இளைஞரை போதையில் சுட்டுக்கொன்ற காவலர்!
இளைஞரை தன்னுடைய பணி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் ஷாபாத் டயரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் சுரேந்தர். இவர் நேற்று வியாழக்கிழமை காலை பணி முடிந்து, தீபக் கெலாட் என்ற 28 வயதான ஜிம் உரிமையாளரிடம் லிஃப்ட் கேட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது இருவரும் ஓரிடத்தில் காரை நிறுத்தி மது அருந்தி உள்ளனர். இதனை தீபக் கெலாட் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, தான் போலீஸ் உடையில் இருப்பதால் வீடியோ எடுக்கக்கூடாது என சுரேந்தர் கூறியுள்ளார். இதனால் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த சுரேந்தர் தனது பணித் துப்பாக்கியை எடுத்து தீபக் கெலாட்டை சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீபக் கெலாட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்து தலைமைக் காவலா் சுரேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சுரேந்தரை, பணி நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.