பாஜக வேட்பாளர் தெரிவித்த சர்ச்சை கருத்து.. செய்தியாளர் சந்திப்பில் விம்மி அழுத முதல்வர் அதிஷி!
பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி தெரிவித்த சர்ச்சைக் கருத்து - செய்தியாளர் சந்திப்பின்போது விம்மி அழுதார் முதல்வர் அதிஷி!
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியல் அறிவிப்புகளும் வெளியான வண்ணம் உள்ளன. டெல்லியின் கால்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷிக்கு எதிராக பாஜகவின் சார்பில் ரமேஷ் பிதூரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் கடந்த வாரம் ரோகிணி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ”இதற்கு முன்பு அதிஷி தன்னுடைய துணை பெயரை "மர்லெனா" என்பதில் இருந்து தற்போது "சிங்" என மாற்றி விட்டார். அவர் தன்னுடைய தந்தையை மாற்றிவிட்டார் போல” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவரது இந்த கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் டெல்லியில் முதல்வர் அதிஷி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தன் மீதான பாஜக வேட்பாளர் ரமேஷ் விதுரி கருத்து குறித்து பேசிய அவர், “என் தந்தை வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக இருந்தார்.டெல்லியின் நடுத்தரக் குடும்பங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் பாடம் கற்றுக் கொடுத்தார்.
அவருக்கு தற்போது 80 வயதாகிறது அவரால் உரிய துணை இன்றி நடக்கக்கூட முடியாது.ஆனால் ஒரு தேர்தலுக்காக நீங்கள் இத்தனை தரம் தாழ்ந்து இறங்குவீர்களா? இந்த நாட்டின் அரசியல் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகும் என தான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை” என குற்றம் சாட்டினார். அப்போது அதிஷி மேற்கொண்டு பேச முடியாமல் விம்மி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.