“24 மணி நேரத்தில் 4 கொலைகள்... அபாயக் கட்டத்தில் டெல்லி”- து.ஆளுநருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

“டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு கொலைகள் அரங்கேறியுள்ளன; சட்டம் ஒழுங்கு அபாயக் கட்டத்தில் இருக்கிறது” என குறிப்பிட்டு டெல்லி துணை ஆளுநருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால் கோப்புப் படம்

தலைநகர் டெல்லியில் பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்கள் சுட்டுக் கொள்ளப்படுவது, நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்படுவது உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Arvind Kejriwal & Vinai Saxena
Arvind Kejriwal & Vinai Saxena

அதில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தலைநகர் டெல்லியில் நான்கு கொலைகள் அரங்கேறி உள்ளன. டெல்லியில் சட்டம் ஒழுங்கு அபாய கட்டத்தில் இருக்கிறது. உடனடியாக டெல்லி அமைச்சரவையுடன் துணைநிலை ஆளுநர் ஆலோசனை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “இரவு நேரங்களிலும் பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் டெல்லி காவல்துறையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக தலைநகர் டெல்லியில் வசிக்கும் சுமார் 2 கோடி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் டெல்லி அரசு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com