டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு சகோதரிகள் - மத்திய அரசை கடுமையாக சாடிய முதல்வர் கெஜ்ரிவால்
தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் இன்று அதிகாலையில் இரண்டு சகோதரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் 30 வயதான பிங்கி மற்றும் 29 வயதான ஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஆர்.கே.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கடன் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனையில், கொலையாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் சகோதரனைக் சுடும் நோக்கத்துடன் வந்ததாகவும், ஆனால், அதற்கு பதிலாக சகோதரிகளை சுட்டுக் கொன்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
அதிகாலை 4:40 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது சகோதரரிடமிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்ததை அடுத்து, துப்பாக்கி சூடு காயங்களுடன் இரண்டு சகோதரிகளும் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், டெல்லி போலீசார் இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் தொடர்ந்து துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றம், பேருந்து நிலையம், மார்க்கெட் என பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் கூட சர்வசாதாரணமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து கருத்து கூறியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் ,அதே நேரத்தில் டெல்லி மக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணரத் தொடங்கி இருப்பதாகவும், டெல்லியின் சட்ட-ஒழுங்கை கையாள வேண்டியவர்கள், அதை சரி செய்யாமல், அரசை குறிப்பாக, டெல்லி அரசை பிடிப்பதில்தான் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், கடுமையாக சாடியுள்ளார். மேலும், டெல்லியின் சட்டம்-ஒழுங்கு டெல்லி அரசான ஆம் ஆத்மி அரசின் கீழ் இருந்திருந்தால், டெல்லி பாதுகாப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.