வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..!

வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..!

வன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..!
Published on


டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்களின் வீடுகள் எரிந்த நிலையில், அவர்களுக்கு இந்துக்கள் தங்களின் வீடுகளில் பாதுகாப்பு அளித்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 30 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளீதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அசோக் நகரில் இஸ்லாமியர்களின் குடியிருப்புப்பகுதியில் வன்முறை நடந்தது. இந்த வன்முறையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இஸ்லாமியர்களின் 40 வீடுகளையும் கடைகளையும் எரித்துள்ளனர். மேலும் வன்முறை நடந்த நேரம் மதிய வேளை என்பதால் மசூதியில் தொழுகையில் இருந்த 20 க்கும் மேற்பட்டோரையும் அவர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் செய்வதறியாது தவித்த இஸ்லாமியர்களுக்கு, அருகில் வசிக்கும் இந்துக்கள் தங்களின் வீடுகளில் பாதுகாப்பு அளித்து உதவியுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், “தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் வெளி ஆட்கள். அவர்கள் கைகளில் இரும்பு கம்பிகளை வைத்திருந்தனர். தங்களது முகத்தை துணியால் மறைத்து இருந்தனர். அவர்கள் அங்கிருந்த வீடுகளை எரிக்கத் தொடங்கினர். எங்களால் எதையும் செய்ய முடியவில்லை.

தாக்குதலால் எல்லாம் இழந்தநிலையில், தெருவில்தான் தங்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், அண்டை வீடுகளில் இருந்த எங்கள் இந்து சகோதரர்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எங்களுடனே இருந்தார்கள். அவர்களது வீடுகளில் அடைக்கலம் கொடுத்தார்கள். இந்தப் பகுதியில் நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இத்தனை ஆண்டுகளில் எங்கள் இந்து சகோதரர்களுடன் எவ்வித முரண்பாடும் இல்லை. நாங்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்” என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com