டெல்லி | பாஜக அரசு முன் நிற்கும் சவால்கள்.. குற்றஞ்சாட்டிய அதிஷி.. பதிலடி கொடுத்த முதல்வர்!
தலைநகர் டெல்லிக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் அபார வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாஜக சார்பில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வான ரேகா குப்தா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர் நேற்று டெல்லி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, முதல்வர் ரேஸில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஆஷிஷ் சூட் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், ரேகா குப்தா திடீரென தேர்வு செய்யப்பட்டது பல தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் முன்பு பல சவால்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக மாசுபாடு முக்கியப் பிரசனையாக உள்ளது. இதற்கு கடந்தகால ஆட்சிகளில் முற்றிலும் தீர்வு காண வழிசெய்யப்படவில்லை. அந்த வகையில், பாஜகவுக்கும் இது முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்து, தேர்தல் பிரசாரத்தின்போது யமுனை நதி குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் யமுனை நதியின் 57 கி.மீ நீளமுள்ள பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் பாஜக அரசு தீவிரம் காட்ட வேண்டும்.
அடுத்து, நகரத்தில் உட்கட்டமைப்பு பிரச்னைகள் சரி செய்யப்படாததும் ஆம் ஆத்மியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. ஆகையால், டெல்லியின் சீரழிந்து வரும் சாலைகள் மற்றும் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்தவும் பாஜக களத்தில் இறங்க வேண்டும்.
தேர்தலின்போது பாஜக இவற்றை எல்லாம் சரிசெய்வதாகத் தெரிவித்துள்ளது. அதனால், இத்தகைய சவால்களை எல்லாம் பாஜக நிறைவேற்றும் என டெல்லி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதவிர, முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முந்தைய அரசின் நலத்திட்டங்களைத் தொடர்வது என பாஜக அரசு முன்பு சவால்கள் காத்துக் கிடக்கின்றன.
குறிப்பாக, டெல்லி பெண்களுக்கு மாதாந்திரமாக ரூ. 2,500 கௌரவ ஊதியம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும். இது கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாகும். (இதை மார்ச் 8க்குள் நிறைவேற்றுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது) அதேசமயம், ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய இலவச மின்சாரம், இலவச தண்ணீர் இணைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட நலத்திட்டங்களும் பாஜக அரசுக்கு சவாலாக உள்ளன.
இதற்கிடையே, "முதல் நாளிலிருந்தே பாஜக அரசு, டெல்லி மக்களை ஏமாற்றி வருகிறது" என முன்னாள் முதல்வர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர், “தேர்தலுக்கு முன்பு, பிரதமர் மோடியும் அனைத்து பாஜக தலைவர்களும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே டெல்லியில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதத்திற்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் இன்று, முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு முதல்வர் ரேகா குப்தா, “டெல்லியை இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள். எங்கள் ஆட்சியின் ஒரேநாள் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எப்படி கேள்விகள் எழுப்ப முடியும்? பதவியேற்ற உடனேயே, முதல் நாளில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். ஆம் ஆத்மி கட்சியால் தடுக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
முதல் நாளிலேயே டெல்லி மக்களுக்கு ரூ.10 லட்சம் நன்மையை வழங்கியுள்ளோம். ஆகையால், அவர்கள் (ஆம் ஆத்மி) எங்களை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. நாங்கள் இப்போது டெல்லியைப் பற்றி கவலைப்படுகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் டெல்லி அதன் உரிமைகளைப் பெறும். அவர்கள் தங்கள் சொந்தக் கட்சியைக் கவனித்துக் கொள்ள வேண்டும்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.