“வன்முறையில் ஈடுபடாதீர்கள்” - முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்
யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றப் போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது. போராட்டத்தின் போது பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. கல் வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இந்த வன்முறையால் தெற்கு டெல்லி முழுவதும் போராட்டக் களமாக மாறியது. ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த வகையான வன்முறையும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கூறிய அவர், போராட்டம் அமைதியான வழியில் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். அத்துடன், துணை நிலை ஆளுநரிடம் வன்முறை தொடர்பாக பேசியுள்ளதாகவும், அமைதி திரும்ப அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் லேசான பதற்றமான சூழல் நிலவுகிறது. அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் நுழைந்துள்ளதாக ஜாமியா பல்கலைக்கழகம் ஒழுங்குமுறைக் குழு தலைவர் வசிம் அகமது கான் தெரிவித்துள்ளார். அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அடித்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், மாணவர்கள் அல்லாத மற்ற போராட்டக்காரர்களையே வெளியேற்றுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.