டெல்லி கார் வெடிப்பு சம்பவம் இதுவரை நடந்தது என்ன? வெளியான முக்கியத் தகவல்கள்
டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அதிகமாக உள்ள தலைநகரில் மிக மோசமானதாக கருதப்படுகிறது. என்.ஐ.ஏ மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உமர் முகமது என்ற நபர் காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லி செங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த கார் வெடிப்பு தாக்குதல் சம்பவமானது ஒரு மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
கார் வெடிப்பு எங்கே,எப்போது நடந்தது?
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே மாலை 6.52 மணியளவில் HR26 CE 7674 என்ற பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை ஹூண்டாய் i20 கார் வெடித்து சிதறியது. மெதுவாக வந்த கார் ரெட் சிக்னலில் நின்ற பிறகு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தைச் சுற்றி இருந்த சில வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
இந்த பகுதியை பொறுத்தவரை, டெல்லியின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பழமையான பகுதியாக பார்க்கப்படுகிறது. முகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில் பாரசீக மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணிகளில் கட்டப்பட்ட கட்டமைப்புகளால் சூழப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அடிக்கடி வந்து செல்லக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது.
சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவின் மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான என்.ஐ.ஏ, கார் வெடிப்புக்கான காரணத்தை விசாரித்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட அளவில் கூட்டம் நடத்தி தீவிரமாக ஆலோசனை செய்திருக்கிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகள் விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும், அனைத்து கோணங்களிலும்" விசாரிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தடயவியல் குழுக்கள் ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், உமர் முகமது என்பவர் தான் காரை ஓட்டிச் சென்றிருக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவரது சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, டெல்லி காவல்துறை அடையாளத்தை உறுதிப்படுத்த அவற்றில் டிஎன்ஏ பரிசோதனையை நடத்தி வருகிறது. டெல்லி காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
கார் வெடித்ததை நேரில் பார்த்தவர்கள் விலகியும் இருக்கிறார்கள். பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக விவரித்தனர். நான் மெட்ரோ நிலையத்தில் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது தீப்பிடித்தது. மக்கள் திகைத்துப் போய் ஓடத் தொடங்கினர், என்று சுமன் மிஸ்ரா என்ற ஒரு பெண் கூறினார்.
மேலும், உடல்களுக்கு அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. நான் உட்பட வேறு சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்து இருக்கிறார். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

