வெடிகுண்டு மிரட்டல் | கொச்சியிலிருந்து டெல்லி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்!
கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு, இன்று காலை மஸ்கட்டில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்தது. பின்னர் அது இன்று காலை 9.31 மணியளவில் டெல்லிக்குப் புறப்பட்டது. அந்த விமானத்தில் 157 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர். விமானம் மராட்டிய மாநில வான் எல்லையில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கொச்சி விமான நிலையத்திற்கு இமெயில் மூலம், இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் மராட்டியத்தின் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விமானம் முழுவதும் சோதனை நடைபெற்றது.
முன்னதாக, குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மேலும், இக்கட்டடத்தில் இருந்தவர்களும் உயிர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 274 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் விமான விபத்து சம்பவமே இன்னும் மக்களைவிட்டு விலகாத நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விமானம் குறித்த அசெளகர்ய தகவல்கள் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.