'இது முட்டாள்தனம்’ - அநாகரீகமாக பேசிய எம்.பி. ரமேஷ் பிதூரிக்கு புதிய பொறுப்பு வழங்கிய பாஜக தலைமை!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரிக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
ரமேஷ் பிதூரி
ரமேஷ் பிதூரிட்விட்டர்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய டெல்லி பாஜக எம்.பி.

கடந்த செப். 21ஆம் தேதி புதிய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நடைபெற்ற சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.கவின் தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, மோடியைப் புகழ்ந்து பேசினார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி குறுக்கிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் பிதூரி, குன்வர் டேனிஷ் அலியைப் பார்த்து, அவருடைய மதத்தைக் குறிப்பிட்டும், கேட்கவே முடியாத அளவிற்கு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து இதே வார்த்தையை அவர் பயன்படுத்தி பேசியது இணையதளங்களில் வைரலாகியது.

குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரி
குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரி

எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்.. நோட்டீஸ் அனுப்பிய பாஜக

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ரமேஷ் பிதூரியிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரத்தில், வெறுப்புணர்வை அவையில் வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருந்தார்.

டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக ரமேஷ் பிதூரி நியமனம்!

இந்த நிலையில், பாஜக தலைமை ரமேஷ் பிதூரிக்கு புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

ரமேஷ் பிதூரி
ரமேஷ் பிதூரி

இதற்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக ஏற்கெனவே சட்டீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக தெற்கு டெல்லி எம்.பியும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவருமான ரமேஷ் பிதூரி நியமிக்கப்பட்டுள்ளார். இதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

சச்சின் பைலட்டின் சொந்த தொகுதி! 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்க் மாவட்டம், மூத்த காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டின் சொந்த தொகுதி உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இங்கு குஜார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். சச்சின் பைலட்டும் ரமேஷ் பிதூரியும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆக, அச்சமூக வாக்குகளைக் குறிவைத்தே பாஜக தலைமை ரமேஷ் பிதூரியை தேர்தல் பொறுப்பாளராக்கி இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.

புதிய பொறுப்புக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதுகுறித்து, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், ’வெறுப்புக்கு பாஜக வெகுமதி கொடுத்துள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பிஎஸ்பி எம்.பி. தனிஷ் அலியை பேசக்கூடாத வார்த்தைகளால் தாக்கிப்பேசிய பாஜக எம்.பி. பிதூரியை ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கி பரிசு கொடுத்துள்ளது. டோங்கில் முஸ்லிம் மக்கள் தொகை 29.25 சதவீதம். இது அரசியல் பலன்களுக்கான வெறுப்பினை அடையாளப்படுத்துகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

அதுபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்.’ ‘இது எல்லாம் அவர்களின் முட்டாள்தனம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, ’ஒரு முஸ்லிம் எம்பிக்கு எதிராகப் பேசியதற்கான வெகுமதியை பிதூரி பெற்றுள்ளார். ஷோகாஸ் நோட்டீஸ் வழங்கிய நபருக்கு பாஜக எப்படி புதிய பாத்திரத்தை வழங்கியுள்ளது? நரேந்திர மோடி ஜி இதுதான் சிறுபான்மையினருக்கான உங்களின் சிநேக பாவமா, அன்பின் எல்லையா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com