டெல்லி: அபாயகரமான நிலையில் காற்றின் தரம்; மீண்டும் Online-க்குத் திரும்பும் கல்வி!
தலைநகர் டெல்லியில் கடும் மூடுபனி நிலவி வரும் நிலையில், காற்றின் மாசுபடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 0 முதல் 500 வரையிலான புள்ளிகள் அடிப்படையில் காற்றின் தரத்தை கணக்கிடுகிறது. இது காற்றின் தரக் குறியீடு (Air Quality Index - AQI) எனப்படுகிறது. இதில் AQI அளவு 0-50க்குள் இருந்தால் சுத்தமான காற்று என்றும், 401 புள்ளிகளுக்கு மேல் இருப்பது மிக மோசமான மாசுபாடு கொண்டது என்றும் வரையறுக்கப்படுகிறது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியின் 27 பகுதிகளில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ததில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றின் தரக்குறியிடு 408 ஆக இருந்த நிலையில் தற்போது 12ற்கும் மேற்பட்ட இடங்களில் காற்றின் தரக்குறியீடு 498 ஐ தாண்டி அபாயகரமான நிலையில் உள்ளது . இந்த காற்று மாசுபாட்டால் டெல்லியில் உள்ள மக்களும், டெல்லி வாழ் கால்நடைகள் மற்றும் பறவைகள் கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்பட் வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்க கல்வி முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து பாடங்களை கற்பிப்பதை தவிர்த்து, அவர்களுக்கு இணையவழி மூலம் பாடங்கள் நடத்திட டெல்லி பள்ளி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை அவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்துவதை உறுதி செய்வதுடன், 6 முதல் உள்ள பிற வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை நடத்திட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
காற்று மாசுபாடு மற்றும் அதிகரிக்கும் மூடுபனி காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில், வாகனங்கள் விபத்திற்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் , நிலைமை சீராகும் வரை மாணவர்களின் நலன் கருதி, எஞ்சியுள்ள மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்திட வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- ராஜ்குமார்.ர
