டெல்லி: மூன்றாவது நாளாக மோசமான நிலையில் காற்றின் தரம்.. கடும் கட்டுப்பாடுகளை விதித்த அரசு
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது. இன்று காலை சராசரி காற்று தரக் குறியீடு 223 ஆக பதிவானது. பூசா, ஜஹாங்கிர்புரி, ரோகினி உள்ளிட்ட 38 கண்காணிப்பு நிலையங்களில் காற்று தரக் குறியீடு 250-க்கு மேல் பதிவாகியுள்ளது. நகரின் மீது புகைமூட்டம் படர்ந்துள்ளதால் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட 1.8 டிகிரி அதிகமாக 19 டிகிரி செல்சியஸாக உள்ளது.
இந்த மாசு அதிகரிப்புக்கு மூன்று காரணிகள் கூறப்படுகின்றன. தசரா பண்டிகையின் போது ராவணன் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதும், பல இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டதும் மாசை திடீரென உயர்த்தியுள்ளது. அக்டோபர் 20-ம் தேதி 179 ஆக இருந்த காற்று தரக் குறியீடு அடுத்த நாளே 245 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் வாகன புகைதான் முக்கிய காரணம் என கணக்கிடப்பட்டுள்ளது. டெல்லி மாசில் 19 சதவீதத்திற்கு மேல் வாகனங்களால் ஏற்படுகிறது. பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் வைக்கோல் எரிக்க தொடங்கியுள்ளதும் மாசை அதிகரிக்கிறது. தற்போது இதன் பங்கு 7.4 சதவீதமாக உள்ள நிலையில் நாளை 16 சதவீதம் வரை உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குளிர் காலம் தொடங்கி காற்றின் வேகம் குறைந்ததும் புகை வெளியேறாமல் தேங்க காரணமாகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் கடந்த அக்டோபர் 21-ம் தேதி முதல் GRAP நிலை-1 கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதில் ஓட்டல்களில் நிலக்கரி, விறகு தந்தூர் தடை, குப்பை எரிக்க தடை, டீசல் ஜெனரேட்டர் தடை மட்டுமே உள்ளது. இதை தவிர மெட்ரோவில் 20 கூடுதல் சேவைகள், வீட்டில் இருந்து பணி, PUC இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை போன்றவை GRAP-1 இல் இல்லை, அவை டெல்லி அரசின் குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
நவம்பர் 1 முதல் வரும் கட்டுப்பாடுகளின்படி PUC சான்று இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்படாது, டெல்லிக்கு வெளியே பதிவான BS-6 தரம் இல்லாத வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய ஜனவரி 31 வரை தடை விதிக்கப்படுகிறது, இதில் CNG மற்றும் மின்சார வாகனங்களுக்கு விலக்கு உண்டு. மேலும் அங்கீகரிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி அலுவலகம் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரையும், அரசு அலுவலகம் காலை 10 முதல் மாலை 6.30 வரையும் இயங்கும் வகையில் நேரம் மாற்றப்படுகிறது, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி முறையும் அமலுக்கு வருகிறது.

