\
Delhi Pollution: 6,581 Lung Cancer Cases, 913 Deaths in 6 Years
Delhi Air Pollution Crisis: 6,581 Lung Cancer Cases and 913 Deaths in Six YearsANI

புகைப்பிடிக்காமலேயே புற்றுநோய்.. டெல்லியை உலுக்கும் நச்சுக் காற்று.. 6 ஆண்டுகளில் 913 உயிர்கள் பலி!

புகைப்பிடிக்கவில்லை... ஆனாலும் நுரையீரல் புற்றுநோயா? 20 வயதிலேயே இளைஞர்களைக் குறிவைக்கும் டெல்லியின் நச்சுக் காற்று! கடந்த 6 ஆண்டுகளில் 6,581 பேர் பாதிப்பு, 913 பேர் உயிரிழப்பு என RTI மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த ஆறரை ஆண்டுகளில் நான்கு முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 6,581 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளும், 913 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதிர்ச்சியளிக்கும் வகையில், தற்போது 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இந்நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Delhi Pollution: 6,581 Lung Cancer Cases, 913 Deaths in 6 Years
Delhi Pollution: 6,581 Lung Cancer Cases, 913 Deaths in 6 YearsANI

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் PTI பாஷா நிறுவனம் பெற்ற தகவலின்படி, 2020 ஜனவரி 1 முதல் 2026 ஜூலை 31 வரை AIIMS, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சஃப்தர்ஜங் (Safdarjung) மருத்துவமனை மற்றும் டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனம் ஆகியவற்றில் இந்தப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் AIIMS மருத்துவமனையில் 4,860 பாதிப்புகளும், 158 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் 1,613 பாதிப்புகளும், 354 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. RML மருத்துவமனையில் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 பேர் பெண்கள். மேலும், 8 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. சஃப்தர்ஜங் மருத்துவமனையில் 393 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.

நுரையீரல் புற்றுநோயாளிகளில் சுமார் 10 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சிலர் 20 வயதின் இறுதிப் பருவத்திலேயே பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயாளிகள் புகைப்பிடிப்பவர்களாக இருந்த நிலையில், தற்போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் புகைப்பிடிக்காதவர்கள் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் நுண்துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி, செல்களைப் பாதித்து புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Delhi Pollution: 6,581 Lung Cancer Cases, 913 Deaths in 6 Years
Delhi Pollution: 6,581 Lung Cancer Cases, 913 Deaths in 6 YearsANI

மேலும், ஆரம்பக் கட்டத்தில் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிவதில்லை. தொடர்ந்து இருமல், சளியில் ரத்தம் வெளியேறுதல், காரணமின்றி உடல் எடை குறைதல், நெஞ்சு வலி மற்றும் அடிக்கடி சுவாசப் பாதைத் தொற்று ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வாகனப் புகை, தொழிற்சாலை மாசு, கட்டுமானத் தூசி, குப்பை எரிப்பு உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கைகள் அவசியம். காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; மக்களின் உயிரைப் பாதிக்கும் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சினை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.