காதலிகளுக்கு அன்பளிப்பு வழங்க ஐபோன் திருடிய இளைஞர்கள்
தங்களுடைய காதலிகளுக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக ஐ போன் திருடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு, ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை வழங்குவதற்காக டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை வழி மறித்த ஷாஷாங் அகர்வால்(32) மற்றும் அமர் சிங்(29)ஆகியோர் டெலிவரிக்கு சென்ற இளைஞரிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களை வழிப்பறி செய்தனர்.
இது குறித்து தெரிவித்துள்ள காவல் அதிகாரி, ''ஷாஷாங் அகர்வால், அமர் சிங் ஆகியோர் ஏற்கெனவே டெலிவரி செய்யும் வேலை பார்த்தவர்கள். தீபாவளி நேரத்தில் விலை உயர்ந்த பொருட்கள் ஆர்டர் செய்யப்படும் என்பதை ஏற்கெனவே அறிந்த அவர்கள், இளைஞரை குறிவைத்து பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். தங்களுடைய காதலிகளுக்கு கொடுப்பதற்காக ஐபோன் 11 போன்ற பொருட்களை வழிப்பறி செய்துள்ளனர்.
தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறிக்கு உதவிய மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறி செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்'' என்றும் தெரிவித்துள்ளார்.

