ஹெலிகாப்டர் மதியம் 12.08 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது - ராஜ்நாத் சிங்

ஹெலிகாப்டர் மதியம் 12.08 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது - ராஜ்நாத் சிங்
ஹெலிகாப்டர் மதியம் 12.08 மணிக்கு கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது - ராஜ்நாத் சிங்
பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மதியம் 12:15 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால் 12.08 மணியளவில் கட்டுப்பாடு மையத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். அதில், ''பிபின் ராவத் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைக் கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ அதிகாரிகளுடன் உரையாட குன்னூருக்கு பயணம் சென்றார். நேற்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிபின் ராவத் சூலூர் கிளம்பினார். அந்த விமானம் 11:35 மணியளவில் சூலூர் விமானப்படைத் தளத்தில் இறங்கியது.
11: 48 மணிக்கு எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் மூலம் பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் கிளம்பினர். இந்த ஹெலிகாப்டர் 12:15 மணிக்கு வெலிங்டன் சென்றடைந்து இருக்க வேண்டும். ஆனால் மதியம் சுமார் 12.08 மணியளவில், சூலூரில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்தது. தரையிறங்குவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதும் அப்பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது உயிருடன் இருந்த சிலரைக் காப்பாற்றும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விசாரிக்க இந்திய விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த விசாரணை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங், ஏர் ஆபிசர் கமாண்டிங் இன் சீப் ஆகியோர் தலைமையில் நடக்கும். உயிரிழந்த முப்படைகளின் தலைவரின் உடல் நாளை முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” என்று ராஜ்நாத் சிங் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com