வீரர்களின் தாய்மார்களின் கால்களில் விழுந்து வணங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தாயின் கால்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொட்டு வணங்கிய நிகழ்வு கவனத்தை பெற்றுள்ளது.
டேராடூனில் வீரமரணமடைந்த வீரர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவியர், தாய்மார்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் மேடைக்கு வந்த வீரர்களின் தாய்மார்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து மரியாதை செலுத்தினார். அதில் ஒரு தாய் வேண்டாம் என்று நிர்மலா சீதாராமனின் கைகளை இறுக்க பிடித்து கொண்டார். ஆனால் பூங்கொத்து கொடுத்துவிட்டு மீண்டும் அந்த தாயின் கால்களில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் விழுந்து வணங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருந்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம், தேசிய போர் நினைவுச் சின்னம் உள்ளிட்ட ராணுவத்தினரின் பிரச்னைகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு தீர்வு கண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ராணுவத்தினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வெறும் பேச்சோடு நின்று விடாமல், அதனை செயல்கள் மூலம் நிறைவேற்றி உள்ளோம் எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.