தீபாவளி திருநாள் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது அங்கு ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளதால் தீபாவளி வழக்கத்தை விட உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்டடங்கள் வண்ணமயமாக காட்சியளிப்பதுடன் வண்ண விளக்குகளும் நகரெங்கும் ஜொலித்து வருகின்றன.
சுவர்களில் ராமாயண இதிகாச காட்சிகள் வரையப்பட்டுள்ளன. சாலைகளில் வண்ணக்கோலங்களும் வரையப்பட்டுள்ளன. ராமர், லட்சுமணர், சீதை, அனுமார் வேடமிட்டவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சரயு நதிக்கரையில் வந்திறங்கிய நிலையில் அவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் இருவரும் ராமஜென்மபூமி கோயிலில் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து மாலையில் அயோத்தி நகரெங்கும் ஐந்தரை லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் ஊரே விளக்கொளியில் வண்ணமயமாக ஜொலித்தது. ராமாயண இதிகாசப்படி தீய சக்தியான ராவணனை கடவுள் ராமர் போர் புரிந்து அழித்து அயோத்திக்கு திரும்புகையில் அவரை வண்ண விளக்குகளால் வரவேற்பதே தீபாவளி பண்டிகை என்றும் கூறப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து வரும் திங்கள் கிழமையுடன் ஓராண்டு நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.