வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கைது - மத்திய அரசு பயப்படுவதாக மம்தா கருத்து
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை அடுத்து கர்நாடகாவிலும் போராட்டம் நடத்தப்படும் என்பதால் முன் எச்சரிக்கையாக பெங்களூரு நகரம் முழுவதும் மூன்று நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்ப்பை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பாதாகையுடன் பெங்களூரு டவுன்ஹால் சாலையில் போராட்டம் நடத்த முயன்ற வரலாற்றாசியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். பேச்சு வார்த்தைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்தக் கைதினை தீபா மேத்தா, ஹுமா குரேஷி மற்றும் பலர் கண்டித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் இன்று காலை முதல் சரியாக இயங்காததால் பலருக்கும் இந்தத் தகவல் சரிவர சென்று சேரவில்லை என பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும் ட்விட்டர் பகத்தில் "releaseramchandraguha" என்ற ஹேஷ்டேக் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவரை விடுதலை செய்யக்கோரி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முகமது ஸீஷான் ஐயூப் உட்பட பல பாலிவுட் பிரபலங்களும் சமூக ஊடகங்களில் குஹா கைதை கண்டித்து கருத்து கூறியுள்ளனர். படிப்பு அறிவு இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து நன்றாக படித்த மற்றும் கல்வியறிவு பெற்ற நபர்தான் என்றும், அதற்கு இந்தக் கைதுதான் சான்று என்றும் ஐயூப் கூறியுள்ளார். குஹாவை காவல்துறையினர் தடுத்து வைத்திருக்கும் வீடியோவை இவர் ரீ-ட்வீட் செய்து இதனை எழுதியுள்ளார்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தாவும், குஹா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளர். தனது ட்வீட்டில், "இது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆணவப் போக்கு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வரலாற்று ஆசிரியரை கண்டு மத்திய அரசுக்கு பயந்துவிட்டது” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “இந்த அரசுக்கு மாணவர்களை கண்டால் பயமாக இருக்கிறது.
சிஏபி மற்றும் என்ஆர்சி குறித்து ஊடகங்களுடன் இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாசிரியர் பேசினால் பயமாக இருக்கிறது. காந்திஜியின் பதாகையை பிடித்திருந்தால் பயப்படுகிறது. ராமச்சந்திர குஹாவை தடுத்து வைத்திருப்பதை நான் கண்டிக்கிறேன். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எங்களின் முழு ஆதரவை வழங்குகிறோம்” என அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.