சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 91.1% தேர்ச்சி - சென்னை 2வது இடம்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ - மாணவிகளுக்கு கடந்த பிப்ரவரி 21 முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 27 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய சிபிஎஸ்இ-யின் அதிகாரபூர்வமான இணையத்தளங்களில் தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.1 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 4.40% அதிகரித்துள்ளது. இதில், 13 மாணவர்கள் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 25 மாணவர்கள் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 58 மாணவர்கள் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம் 99.85 சதவீதம் பெற்று நாட்டிலேயே முதல் மண்டலமாக வந்துள்ளது. சென்னை மண்டலம் 99 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 74.49% பெற்று குவாஹத்தி கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி மண்டலம் 80.97 சதவீதத்துடன் 9வது இடத்தில் உள்ளது.
தன்னுடைய மகள் சிபிஎஸ்இ தேர்வில் 82 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ரானி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.