இந்தியாவில் வேறூன்றும் கொரோனா: 50ஆக அதிகரித்த உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 450 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்தது. 50பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி முறையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள், கடந்த சில நாட்களில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவல் வாய்ப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 ஆயிரம் பேரின் இருப்பிடத்தை தேடும் பணி தமிழகம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.