டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
Published on

டெல்லியில் வெடித்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கலவர பூமியாக காட்சியளித்த அந்நகரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, கடந்த திங்களன்று இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கு வன்முறை பரவி ஆங்காங்கே கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன.

வன்முறை தொடர்பாக இதுவரை 18 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மோதல் தொடர்பாக 1‌6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ரந்தவா தெரிவித்துள்ளார். காவல்துறையினர், சிஆர்பிஎஃப் வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது டெல்லியில் இயல்பு நிலை திரும்புவதாக அவர் கூறினார். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இவை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

வன்முறை நடந்த பகுதியில் சிதறிக்கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் மேற்கொண்டு நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப்படை, காவலர்கள், வஜ்ரா வாகனம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மவுஜ்பூர், ஜாப்ராபாத் உள்ளிட்ட பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடைகளின் வாயிலில் நோ என்சிஆர், சிஏஏ என எழுதப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com