எரித்துக் கொல்லப்பட்ட வட்டாட்சியரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்

எரித்துக் கொல்லப்பட்ட வட்டாட்சியரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்
எரித்துக் கொல்லப்பட்ட வட்டாட்சியரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்

தெலங்கானாவில் எரித்துக் கொலை செய்யப்பட்ட வட்டாட்சியரின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். 

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயா ரெட்டி. ரெங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுரம்பேட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் வட்டாட்சியராக விஜயா ரெட்டி நியமிக்கப்பட்டார். வட்டாட்சியராவதற்கு முன் அரசு பள்ளி ஆசிரியராக விஜயா ரெட்டி பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு தெலங்கானா அரசின் சிறந்த வட்டாட்சியருக்கான விருதை விஜயா பெற்றார். 

இந்த நிலையில் பாசரம் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் என்பவர் தனக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்துக்கு பட்டா பாஸ்புக் கேட்டு விஜயா ரெட்டியின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். சுரேஷின் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பட்டாவில் சுரேஷின் பெயர் இடம்பெற வேண்டும் என்றும் இதில் விஜயா தலையிட்டு தீர்க்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதில் தாமதமாகும் என விஜயா கூறியதால் சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் தன்னிடமிருந்த பெட்ரோலை விஜயா மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் அலறி அடித்துக் கொண்டு ஓடிய விஜயா அலுவலக அறையின் வாயிலில் விழுந்து இறந்துள்ளார்.

விஜயாவை காப்பாற்ற முயன்ற இரு சக ஊழியர்களும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருடன் அன்பாக பழகும் விஜயா, குறைதீர்க்கும் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் அமைதியான முறையில் கையாளக்கூடியவர் என்று அவரது வாகன ஓட்டுனர் தெரிவித்துள்ளார். இதனிடையே விஜயாவைக் கொன்ற சுரேஷ் காவல்நிலையத்தில் சரணடடைந்துள்ளார். 60 சதவிகித தீக்காயங்களுடன் இருக்கும் சுரேஷுக்கு ஓஸ்மானியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரேஷ் தனது ஆத்திரத்தை சற்று கட்டுப்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நேர்ந்திருக்காது என அவரது கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், எரித்துக் கொல்லப்பட்ட வட்டாட்சியரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டாட்சியரின் உடலுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். வட்டாட்சியர் விஜயா எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com