தாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறார்: தம்பி தகவல்
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று சமீபத்தில் கைது செய்யப்பட்ட அவரது தம்பி இக்பால் கஷ்கர் தெரிவித்துள்ளார்.
1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, தாதா தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது தொடர்பாக பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்நாடு தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என மறுத்துவருகிறது. இந்நிலையில், பணம் கேட்டு மிரட்டியது தொடர்பான புகாரில் தாவூத்தின் தம்பி இக்பால் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம், தானே போலீசார் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு அவர் வசிக்கும் இடம் என 6 முகவரிகளை கொடுத்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் தாவூத் பேசுவதில்லை என்றும் அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.