நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் ! உயிரிழந்த பரிதாபம்
(உயிரிழந்த தாஸின் உறவினர்கள்)
திருமண விருந்தின்போது மற்றவர்களுக்கு இணையாக நாற்காலியில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பட்டியலின இளைஞர் தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திர தாஸ். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவர், திருமண விருந்து ஒன்றில் நாற்காலியில் அமர்ந்து உணவு உண்டுள்ளார். இதனை கண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாஸை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தாஸ் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக தாஸின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாஸின் மாமா கூறும்போது, “ தூரத்து உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் எல்லோரும் சென்றோம். நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் இருந்தபோது, தாஸ் மட்டும் சாப்பிடுவதற்காக பந்திக்கு சென்றார். அந்த நேரத்தில் தாஸ் தாக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
தாஸ் தாக்கப்பட்டபோது அவரை காப்பாற்ற நண்பர் ஒருவர் முயற்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ தாஸ் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அதனை பார்த்த மற்றொரு சமூகத்தினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே தாஸின் தட்டை எட்டி உதைத்து சாப்பாட்டை தட்டி விட்டனர். பின்னர் தாஸை மிதித்து கடுமையாக தாக்கினர். இதனால் தாஸ் அங்கிருந்து நகர்ந்து வீட்டை நோக்கி புறப்பட்டார். ஆனால் அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று மீண்டும் தாக்கியது. தாஸ் எப்படியோ சமாளித்துக் கொண்டு அன்றிரவே வீடு திரும்புள்ளார். ஆனால் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வரண்டாவிலே படுத்துவிட்டார். அதிகாலையில் அவர் அம்மா வந்து பார்த்தபோது சுயநினைவு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாஸ், சிகிச்சை பலனின்றி உயிழந்தார்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.